குருவும் – கடவுளும்

இப்பூவுலகில், கடவுள் அவதாரங்களாகவும், சத்குருக்களாகவும், மகான்களாகவும் அவதரித்தவர்கள் ஆன்மீகத்தை வெவ்வேறு சுவைகளாகவும், நறுமணங்களாகவும் வழங்கியுள்ளார்கள். இவ்வளவு மகிமை வாய்ந்த ஆன்மீகத்தில் ஆணிவேராக திகழும் குருவைப் பற்றியும், குருவின் மகிமைகள் பற்றியும் சீரடியில் வீற்றிருக்கும் சாய்பாபா அவர்கள் கூறியதாவது . . . . .

"குருவிற்கு நிகர் எவருமில்லை, குரு கடவுளைவிட உயர்வானவர். குருவின் பணி மிகவும் கடினமானது, குருவானவர், தனது சீடன் மற்றும் பக்தனை பிறவிக்குப் பிறவி பின் தொடர்ந்து ஆன்மீகத்தின் உச்ச ஸ்தானமாகிய கடவுளின் பாதங்களில் சென்றடைய அவனுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்.

இவ்வுலகில் மனிதனாக பிறந்துவிட்டாலே, அவன் குருவின் அனுகிரகத்தினால் மட்டுமே துக்கம் நிறைந்த இப்பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும். மனித உடலில் வாழும் ஜீவாத்மா. குருவிடம் மட்டுமே தன்னை சக ஜீவனாக சமர்ப்பித்து சேவை புரியமுடியும். குருவின் அருள் இல்லாமல் எந்த மனிதனும் மற்றவர்களுக்கு உதவி செய்ய இயலாது.

குருவே சிவன், குருவே தெய்வம், குருவே பந்தம், குருவே உயிர், குருவிற்கு நிகராக எதுவுமில்லை. குரு சச்சிதானந்த ரூபமானவர், பரிபூரணமாக திகழ்பவர், எங்கும் இருப்பவர், குருவின் வாசஸ்தலமே காசி க்ஷேத்திரம். குருவின் பாதச் சுவடுகளை வணங்கினாலே கடவுளின் பரிபூரண ஆசியைப் பெறலாம். குருவின் பாதத் தீர்த்தமே கங்கை. மொத்தத்தில் குருவானவர் மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்வழிப் படுத்துபவர்.

தியானத்திற்கு மூலம் குருவின் வடிவம், பூஜைக்கு மூலம் குருவின் பாதம், மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம், முக்திக்கு மூலம் குருவின் அனுக்கிரஹம், குருவிற்கு நிகர் எவருமில்லை.

பௌர்ணமி தினத்தன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக தனது ஒளிக் கதிர்களை அனைத்து திசைகளிலும் பரப்பி இருளை அகற்றுகிறான். இதைப்போன்றே குருவானவர் ஞான ஒளிப் பிழம்பாகத் திகழ்ந்து சீடர்கள் மற்றும் தன்னை நாடி வரும் மக்களின் அஞ்ஞான இருளைப் போக்கி அவர்களை அருள் ஒளியை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

கடவுளின் வழிகாட்டுதலின்படியே மனிதனுக்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கி, இடர்பாடுகளை களைத்து, தகுதியான குருவை காட்டுவார். இவ்வாறு கடவுளின் அருளால் கிடைக்கபெறும் குரு அவனுடைய அஞ்ஞானத்தைப் போக்கி, அவனுடைய துன்பங்களை களைந்து அவனை இறைவழி நோக்கிச் செல்ல உபதேசிப்பார்."

Copyright © www.aruloliramanswamiji.com. All Rights Reserved. Bookmark and Share Guruvae Saranam: